அதிரை பைத்துல்மாலில் “விழிப்புணர்வு பக்கங்கள்” புத்தக வெளியீடு !


அதிரை பைத்துல்மால் ( ABM ) ! ( இஸ்லாமிய ஏழைகளின் நிதியகம் ) ‘HELP’ HELP US TO HELP THE POOR  என்ற நல்ல ஒரு அடைமொழியுடன் அதிரை வாழ் ஏழை எளியோருக்காக பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு இயக்கங்கள் சாராத மார்க்க வழிகாட்டுதலுடன் ஆரம்பிக்கப்பட்டு நல்ல திறம்பட “அடக்கமாக“ செயல்பட்டுக் கொண்டுருக்கிற ஒரு இஸ்லாமிய அமைப்பு.

பைத்துல்மால் சார்பாக அதன் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் கூட்டம் ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள் தலைமையிலும், வழக்கறிஞர் A. அப்துல் முனாப், S. அப்துல் ஹமீத், O.K.M.சிபஹத்துல்லா, S.M. முஹம்மது முஹைதீன், A.S. அப்துல் ஜலீல் O. சாகுல் ஹமீத், இப்ராகிம் ஆகியோர்கள் முன்னிலையிலும் இனிதே ஆரம்பமானது.


நிகழ்ச்சியின் நிரலாக.............

1. கிராஅத் மெளலவி அப்துல் காதர் ஆலிம் அவர்கள்

2. வரவேற்புரை சகோ. O.K.M.சிபஹத்துல்லா அவர்கள்

3. “ஜக்காத்” மற்றும் “பித்ரா” நிதி வசூல் செய்வது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

4. கல்வி உதவி கோரி பெறப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விவாதம் செய்யப்பட்டது.

5. சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்கள் எழுதிய “விழிப்புணர்வு பக்கங்கள்” புத்தகம் வெளியீடப்பட்டது.

6. நன்றியுரை சகோ. S. அப்துல் ஹமீத் அவர்கள்

7. இறுதியில் துவாவுடன் நிகழ்ச்சி மகிழ்ச்சியாக நிறைவுற்றது.

இதில் பைத்துல்மாலின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் என கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.அதிரை பைத்துல்மாலின் அன்பான வேண்டுகோள் !

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக அதிரை பைத்துல்மால் பல அளப்பறிய சேவைகளை நமதூர் ஏழை எளியோருக்காக செய்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள். தங்களைப் போன்ற தரும சிந்தனை உள்ளவர்களின் உதவி கொண்டு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இச்சேவைகள் தொடர்ந்து தொய்வின்றி நடந்து கொண்டிருக்கின்றன. ( அல்ஹம்துலில்லாஹ் )

இதற்காக தன்னலம் பாராமல் சமூக ஆர்வலர்களாகிய அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளும், முஹல்லா நிர்வாகிகளும் அரும்பாடுபட்டு சேவை செய்து வருகின்றனர். வட்டியும், அநீதியும் மிகைத்து நிற்கின்ற இக்காலகட்டத்திலும் அதிரை பைத்துல்மால் அதனை எதிர்த்து நின்று அழித்திட தன்னால் இயன்ற சேவைகளை ஏழை, எளியோருக்கு செய்து வருகின்றது.

இச்சேவைகளை தொடர்ந்து செய்திட தங்களைப் போன்ற தாராள மனமும், பெருந்தன்மையும் கொண்டோர்களின் நிதி உதவி தேவைப்படுகின்றது. தற்போது அதிரை பைத்துல்மாலில் வட்டியில்லா நகைக்கடன் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோர்களுக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழை குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், ஏழை மாணவ / மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி வழங்கும் திட்டம் ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் பெறப்படுகிற ஜக்காத் நிதி, கூட்டுக்குர்பானி திட்டம் மற்றும் நன்கொடைகள் போன்றவற்றின் மூலம் அல்லாஹ் உதவி கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆகவே நல்லுள்ளம் படைத்த தாங்கள் கடந்த வருடம் போல் இவ்வருடமும் அதிரை பைத்துல்மாலுக்கு தங்களுடைய ஜக்காத் நிதியை வழங்கி அல்லாஹ்வின் அளப்பறிய திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வீர்களாக ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்களுக்கும் அல்லாஹ் இம்மை-மறுமைப் பேறுகளை வழங்குவானாக, ஆமின். வஸ்ஸலாம்.

வங்கி கணக்கின் விவரம் :

அதிரை பைத்துல்மால்
C/A. No. 115-53-332 ( Current Account )
தனலக்ஷ்மி பேங்க்
அதிராம்பட்டினம் கிளை


குறிப்பு : 
கடந்த 27/05/2012 அன்று  சென்னை டெக்னோ பார்க் தலைவர், கீழக்கரை ஹாஜி ஜனாப்.எஸ்.எம்.செய்யது அப்துல் காதர் ( சீனா தானா ) அவர்கள் மற்றும் எஸ்.எம்.இதயத்துல்லாஹ் ( தலைவர் இஸ்லாமிய இலக்கிய கழகம்,சென்னை ) ஆகியோர்கள் கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் சீனா-தான அறக்கட்டளையின் சார்பாக பெறப்பட்ட ரூ100000/- மும், அதிரை பைத்துல்மால் சார்பாக ரூ 202000/-மும் ஆகக்கூடுதல் ரூ 302000 /- ஐ 38 நபர்களுக்கு வட்டியில்லா கடனாகவும், மருத்துவ உதவியாகவும் வழங்கப்பட்டது.
Share:

அதிரை AFFA அணி வெற்றி


பட்டுக்கோட்டை கே ஆர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து போட்டியில் அதிரை AFFA அணி விளையாடி வருகிறது.அதன் படி இன்று மாலை நடந்த முதல் லீக் போட்டியில்  கரம்பயம் அணியை எதிர்கொண்டது.அப்போட்டியில்  கரம்பயம் அணியை 2 -1என்கின்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அரை இறுதியில் அதிரைAFFA அணி 
ஆலத்தூரில் நடந்து வரும் கால்பந்து போட்டியில் அதிரை AFFA அணி அரை இறுதிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடதக்கது

Share:

வாழ்க்கை எனும் பாடம்...வெற்றிலையும் சுண்ணாம்பும் சேர்ந்தால் நாக்கு
...........வெளிக்காட்டும் செந்நிறத்தின் அழகு போல
வெற்றிகளை ஈட்டிவரும் சான்றோர் வாழ்வு
........... வீரியமாய்த் தந்திரமும் இணைந்த தாலே
சுற்றிவரும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டு
..........சுழற்றியதை முறியடித்தார் விரைந்து சென்று
கற்றிடுவோம் அவர்வாழ்வில் முன்னேற் பாட்டை !
..........கழற்றிடுவோம் நம்வாழ்வில் ஐயப் பாட்டை

பல்லுக்குள் அகப்பட்ட நாக்கைப் போலப்
........பக்குவமாய்ச் சுழலுதலே வாழ்க்கை என்போம்
சொல்லுக்கும் செயலுக்கும் வேறு பாடோ
.......சோதனைகள் கொண்டுவரும் முன்னேற் பாடே
வில்லுக்குள் பூட்டிவைத்த அம்பைப் போல
......விவேகத்தைப் பூட்டிவைப்போம் அன்பி னாலே
கல்லுக்குள் மறைந்துள்ளத் தேரை வாழக்
.....கருணையாளன் உணவளித்துக் காப்பா னன்றோ

வாய்கொண்டு விழுங்குகின்ற முயற்சி போல
.........வாழ்க்கையிலும் விடாமுயற்சி இருக்க வேண்டும்
நோய்கொண்டு வாடினாலும் மருந்தை நாடி
.........நோகாமல் சிகிச்சைகள் செய்வோம் தேடி
தாய்கொண்டு வந்தவுடல் அழிவைத் தேடித்
........தானாக மாய்வதற்குக் குழியைத் தோண்டித்
தேய்கின்ற நிலைமைக்கு சைத்தான் நம்மைத்
.......தீண்டுகின்ற சூழ்ச்சிகளை அறிதல் நன்றே !அபுல்கலாம் பின் ஷைக் அப்துல் காதிர்

"கவியன்பன்"கலாம்,
அதிராம்பட்டினம்,
அலைபேசி: 0091-7200332169
Share:

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ஜும்ஆ பயான் (காணொளி)அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ஜும்ஆ பயான் (காணொளி)

 
Share:

அதிரை நல் வாழ்வு பேரவையின் “பசுமைத் திட்டம்” !
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ! )

அதிரை நல் வாழ்வு பேரவையின் சார்பாக நடைபெற்ற இன்றையக் கூட்டத்தில் ஜனாப் அக்பர் ஹாஜியார் தலைமையிலும், ஜனாப் அஹ்மது அலி ஜாஃபர், ஜனாப் O.K.M. சிபஹத்துல்லாஹ், ஜனாப் “கவியன்பன்” அபுல் கலாம், ஜனாப் அஹமது ஹாஜா, ஜனாப் N.A. முஹம்மது யூசுப் ஆகியோர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் நமதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

1. கடந்த 30-12-2006 முதல் காரைக்குடி- திருவாரூர் வழியாக சென்னை வரை சென்று கொண்டிருந்த “கம்பன் எக்ஸ்பிரஸ்” ரயிலை நிறுத்தியதை அடுத்து திருவாரூர் - காரைக்குடி அகல இரயில் பாதைப் பணிகளை விரைவாக முடித்துதர வேண்டும் என்பதற்காக வேண்டி பல போராட்டங்களை  அதிரைப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து ஊர்கள் சார்பிலும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் சார்பிலும், கட்சிகள் சார்பிலும் நடத்தி விட்டோம். ஆனால் எதற்கும் செவி கேட்காமல் மத்திய இரயில்வே துறை உள்ளது. கிட்டத்தட்ட நாட்டில் உள்ள அனைத்து இரயில்வே வழித்தடங்களும் அகல இரயில் பாதையாக மாறிக்கொண்டு வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிரைப்பட்டினம், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்கள் தனி தீவுப்போல் காட்சியளிக்கின்றன. இருக்கின்ற பாதையை மத்திய அரசு அகல பாதையாக மாற்றுவதற்கு ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மத்திய அரசால் அகல ரயில் பாதை பணிகள் துவக்குவதில் ஏற்படும் காலதாமதத்தை கருத்தில்கொண்டு துரிதமாக செயல்படுத்தும் விதமாக கடந்த 14-02-2012 அன்று உயர் நீதி மன்றத்தில் பொது நல மனு ஒன்றில் குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றிக்கேட்டு நமது பேரவை சார்பாக எனது பெயரில் ( அஹமது அலி ஜாஃபர் ) தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதி மன்றம் விசாரணைக்காக எடுத்துக்கொண்டு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இறைவன் நாடினால் விரைவில் சுமூக தீர்வு எட்ட உதவி புரியட்டும்.

2. மனிதராக பிறந்த நமக்கு சில அடிப்படைக் கடமைகள் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்தல், உள்ளத்தை தெளிவாக உற்சாகமாக வைத்தல், தொழிலை நியாய-தர்ம அடிப்படையில் சமுதாயத்திற்கு பாதிப்பில்லாமல் செய்தல், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்- இவ்வாறாக பல்வேறு கடமைகளை நாம் சரியாக செய்ய வேண்டியுள்ளது.

மேற்கண்டவை போக, தம்மை உருவாக்கிய இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளன. பொதுவாக சான்றோர்கள் தாங்கள் வாழுகிற காலத்தில் வருங்கால மக்கள் நலமாக இருக்க பல வகையில் சிந்திக்கிறார்கள். செயல்படுகிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டு தங்களுக்கு என்ன கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கவலைப்படாது நல்லது பல செய்கின்றனர். அவ்வாறு தொலைநோக்குப் பார்வையுடன் எத்தனையோ பெரியவர்கள் செய்த செயல்களின் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.

அந்த வகையில் மரக்கன்றுகளை நட்டு அவற்றிற்கு தண்ணீர் ஏற்பாடு செய்து மரங்களாக உருவாக்குவது என்பது நம்முடைய முக்கிய கடமையாகும்.

இதற்காக “பசுமை திட்டம் – அதிரை“ என்ற பெயரில் தென்னை, பலா, புளியை, எலந்தை, மா போன்ற மரங்கன்றுகள் நடலாம் என எண்ணியுள்ளோம். இதன் முதல் முயற்சியாக நமதூரில் பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையை ஒட்டியும் அதாவது வண்டிப்பேட்டையிலிருந்து மின்சார வாரியம் வரையில் உள்ள சாலையோரப் பகுதியிலும், இதற்கு அடுத்த முயற்சியாக அதிரை பேரூராட்சி கிழக்கு கடற்கரைச் சாலையோரப் பகுதியிலிருந்து பிலால் நகர் இரயில்வே கேட் வரையும் என்பதை முடிவு செய்துள்ளோம்.

நிதி உதவி !

நீதிமன்ற வழக்கு செலவினங்கள் மற்றும் “பசுமை திட்டம் – அதிரை“ போன்ற பணிகளுக்காக ஒவ்வொரு சகோதரர்களின் பங்கும் அவசியம் இதில் இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, இதற்காக நமது பேரவை சார்பாக கீழ்க்கண்ட வங்கி கணக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தெரிவித்துக்கொண்டு இதற்காக தாராளமாக நிதி உதவி செய்து எங்களின் சமூக பணி தொய்வின்றி தொடர ஊக்கம் கொடுத்த வாழ்த்த வேண்டுமாய் அன்புடன் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

வங்கி கணக்கு :
அஹமது அலி ஜாஃபர்
S/B A/c No. : 426394434
இந்தியன் வங்கி
தேனம்பேட்டை கிளை – சென்னை - 600018இப்படிக்கு,
கெளரவத் தலைவர் மற்றும் தலைவர்,
நல் வாழ்வு பேரவை,
அதிரை
Share:

மரண அறிவிப்பு (அஜ்வாத் லெப்பை ஆலிம் மனைவி புதுமனைத்தெரு)


அஸ்ஸலாமு அலைக்கும்

புதுமனைத்தெருவை சார்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹ் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் அஜ்வாத் லெப்பை ஆலிம் அவர்களின் மனைவியும், செக்கடிப் பள்ளி இமாம் முஹம்மது ஆலிம், முஹம்மது சாலிஹ், அப்துல் வஹாப் ஆகியோரின் தாயாருமான அஹமது ஃபாத்திமா அவர்கள் இன்று (வெள்ளிக் கிழமை) பகல் 12-மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஃரிபுக்கு பின் மறைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப் படும்.

அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக.


தகவல்:

அஜ்வா நெய்னா

Share:

முன்னேற்றப் பாதையில் ‘கர்ழன் ஹஸனா’


முன்னேற்றப் பாதையில் ‘கர்ழன் ஹஸனா’(அழகிய கடன் அறக்கட்டளை)

வட்டி ஒழிப்பு முயற்சியில் சிறிய எட்டு வைத்த பங்களிப்புதான், நமதூரில் சில மாதங்களுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட ‘கர்ழன் ஹஸனா’  ( قرضا  حسنا ) எனும் அழகிய கடன் அறக்கட்டளையாகும்.

வட்டியின் தீங்கைப் பற்றி நம் அருள்மறை குர்ஆனும் நபிமொழிகளும் கூறும் எச்சரிக்கைகள் அப்படியே பதிவுகளாக இருக்க, நமது சமுதாயம் அன்றாடம் அனுபவித்துவரும் ‘கொடுமைகள்’ நம் கண் முன்னால் இருந்து கவலை தந்துகொண்டிருந்ததால், வட்டி அரக்கனைச் சிறு ஊசியைக் கொண்டாவது குத்தி வேதனைப் படுத்துவோம்; மக்கள் விழிப்புணர்வு பெறட்டும் எனும் உயர் நோக்கில் தொடங்கப்பட்ட அழகிய கடன் அறக்கட்டளை, எதிர்பார்த்ததைவிட மிகப் பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது!   அல்ஹம்து லில்லாஹ்!

முதலில் நிர்வாகிகள் மூவரால் தொடங்கப் பெற்ற இவ்வறக்கட்டளை, அண்மையில் இன்னும் ஆர்வலர்கள் சிலரைக் கொண்டு விரிவு படுத்தப்பட்டு, பல கைகள் எழுப்பும் பேரோசையாகப் பரிணமிக்கத் தொடங்கியுள்ளது!  அந்த ஆர்வலர்களின் அயராத ஒத்துழைப்பின் பயனாக, பள்ளிவாசல்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் மக்கள் கூடுமிடங்களிலும் நமதூர் மக்களைச் சந்தித்து, நன்கொடைகளாகவும் ஜக்காத் நிதிகளாகவும் நிதியைப் பெற்று, மாஷா அல்லாஹ், இப்போது இவ்வறக் கட்டளையின் வைப்புத் தொகை வளர்ச்சி பெற்றுள்ளது!

சிறு வியாபாரிகளும் ஏழை அன்றாடங் காய்ச்சிகளும் எம்மை அணுகி, ஏற்கனவே அவர்கள் மூழ்கியிருந்த வட்டியிலிருந்து விடுதலை பெற்றுவருகின்றார்கள்!  எமது அழகிய கடன் சேவையால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இதன் சான்றுகளாக, இதோ மனம் திறந்த மடல்கள் இரண்டு:


மேற்கண்ட இரு ஒப்புதல்கள் ‘கர்ழன் ஹஸனா’வின் சேவைக்குச் சான்றாகும்.

இவ்வறக்கட்டளையின் நம்பகத் தன்மையை உணர்ந்த சிலர், தமது ‘ஜக்காத்’ நிதியைக்கூட அனுப்பிவைத்துள்ளனர் என்ற தகவலும் வாசகர்கள் அறியவேண்டிய ஒன்றாகும்.  முறையாகச் சட்ட வரைவுகள் உருவாக்கப்பட்டு, ஆரவாரமின்றி, அமைதியாகச் செயல்படத் தொடங்கியுள்ள இவ்வறக்கட்டளை, வட்டியில் வீழ்ந்து தமக்குக் கிடைக்க வேண்டிய முழு வருமானத்தையும் இழந்து தவிக்கும் சிறு வியாபாரிகளை இலக்காகக் கொண்டு, சேவையாற்றி வருகின்றது.

நமதூரில் நன்கு செயல்பட்டு வரும் எந்தப் பொது அமைப்புக்கும் இவ்வறக்கட்டளை எதிரானதன்று என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விழைகின்றோம்.

மேலதிகமான தகவல்களுக்கு, http://adiraiqardhanhasana.blogspot.com வலைத்தளத்திற்குச் சென்று பார்க்கவும்.-      தகவல்: அதிரை அஹ்மது
Share:

அதிரையை அச்சுறுத்தும் “சுகாதாரம்” !


சுகாதாரத்துறை கவனத்திற்கு !

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிரைப்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை அச்சுறுத்துகின்ற கீழ்க்கண்டவற்றிக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது மக்கள் நல்வாழ்வுத்துறையாகிய சுகாதாரத்துறையின் தலையாயக் கடமையாகும்.

1. இறைச்சிக்காக ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுத்து விற்பனை செய்பவர்களால் பயன்படுத்தப்படும் கூடங்கள் சுகாதாரமான முறையில் உள்ளனவா ? இதன் கழிவுகளை எங்கே கொட்டுகின்றனர் ? இதனால் இப்பகுதியைச் சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டா ? அக்கூடத்தில் உயிரற்ற ஆடு, மாடு, கோழி போன்றவைகள் அறுக்கப்படுகின்றனவா ? முறையாக அரசின் முத்திரை அதில் இடம்பெற்றுள்ளதா ?

2. அதேபோல் கடல் சார்ந்த பொருட்கள் குறிப்பாக மீன்கள், இறால், நண்டு, கணவாய், உலர்ந்த மீன் ( கருவாடு ) போன்றவை விற்பனை செய்யபடுகின்ற கூடங்கள் சுகாதாரமான முறையில் உள்ளனவா ? இதன் கழிவுகளை எங்கே கொட்டுகின்றனர் ? இதனால் இப்பகுதியைச் சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டா ?

இதுபோன்ற பொதுமக்களின் சுகாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது சுகாதாரத்துறையின் தலையாயக் கடமையாகும்.

3. தெருவோரம் சுற்றித்திரியும் நோய் பிடித்த நாய்களால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஆடு, மாடு போன்ற ஜீவனங்களும் அதன் கடியால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதுபோன்ற நாய்களை கட்டுக்குள் கொண்டுவந்து கருத்தடை செய்தால் நாய்களின் கடிக்கும் தன்மை குறைந்து விடும்.

4. பிள்ளைக்குட்டிகளுடன் ஆங்காங்கே தெருவோரம் சுற்றித்திரிவதோடு மட்டுமல்லாமல் இறைச்சிக்கழிவுகள், குப்பைக்கழிவுகள், கழிவு நீர் போன்ற இடங்களில் வசிக்கும் பன்றிகளால் இவைகள் கிளறப்படுவதன் மூலம் பரவும் நோய் கிருமிகளிலிருந்து ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் பன்றிகளின் நடமாட்டங்களை கட்டுக்குள் கொண்டுவருவது அவசியமாகிறது.

5. காளான்கள் போல ஆங்காங்கே தெருவோரக்கடைகளாக “உணவகங்கள்” என்ற பெயரில் நாளும் பொழுதும் அதிகரித்துக்கொண்டு இருக்கும் வேளையில் தரமற்ற, எவ்வித சுகாதார முறைகளையும் பின்பற்றாத இக்கடைகளில் உணவுப்பொருட்களின் சுவையை கூட்டுவதற்கென்று மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட சுவையாகிய “அஜினோமோட்டோ” என்ற மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodiumglutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு புகுந்து விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

6. செயற்கை முறையில் “கார்பைட்” கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் முழு பகுதியும் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு அல்லாமல் இவற்றைப் பார்த்தவுடன் வாங்கும் வகையில் நிறம் மாறி காணப்படுவதாலும், சாப்பிட ருசியாக இருப்பாத்தாலும் வியாபாரங்கள் படு ஜோராரக நடைபெறுகின்றன. இவை உண்போருக்கு பல்வேறு வயிற்று தொல்லைகளை கொடுக்கும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை ! ? இக்கார்பைடைக் கொண்டு வாழைப்பழங்களும் பழுக்க வைக்கப்படுகின்றன என்பது வேதனையான செய்தி.

7. கோடை கால விற்பனையைக் குறி வைத்து தரமற்ற குளிர்பானங்களை விற்பனை செய்து வருகின்ற கடைகளில் தயாரிக்கப்படும் ஆரஞ்சு, லெமன், பாதாம்கீர், புரூட் ஜூஸ், என பல்வேறு ஜூஸ்கள் மொத்தமாக கலந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற கடைகளில் குளிர்பானங்களில் கலர் சேர்மானத்துக்கு ரசாயன உணவுப் பொருள்களுக்குத் தடை செய்யப்பட்ட கலர் பொடிகளை பயன்படுத்துகின்றனர். மேலும் குளிர்பானங்களில் இனிப்பு சுவை கிடைக்க “சாக்கிரின்” என்ற பவுடர் கலக்கப்படுகிறது. இது போன்ற கலவையை பருகுவோருக்கு வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டு, அலர்ஜி ஏற்பட்டு சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் நிலையுள்ளது. “மிக்ஸ்டு புரூட் ஜூஸ்” என்ற பெயரில் அழுகிய தரமற்ற பழங்களை பயன்படுத்தி ஜூஸ் தயாரித்து கூடுதல் இனிப்பு சுவையுடன் விற்பனை செய்கின்றனர்.

8. விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காகவும், அதிகமான லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருட்களில் விதம் விதமாய் கலப்பட உத்திகள் . இதனால் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளளவிலும் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம்தான். அன்றாடம் விற்பனை செய்யும் பலசரக்கு கடைகளில் உள்ள உணவுப் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தினாலே தெரிந்துவிடும் பொருட்களின் தரம் என்னவென்று.

9. தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய்களை பரப்புவது கொசுவே. டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன. தெருக்களில், குளம் குட்டைகளில் கழிவுகள் மற்றும் குப்பைகளில் வசிக்கும் இதுபோன்ற உயிர்க்கொல்லிகளை ஒழித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

10. மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை பதினைந்து நாட்களுக்கொரு முறை சுத்தம் செய்தல் மற்றும் அதற்குரிய விவரங்களை பதிவு செய்தல். குளோரின் கலத்தல் மற்றும் அதற்குறிய சோதனை செய்தல்.

11. மருத்துவக்கழிவுகளை ஒவ்வொரு மருத்துவமனையும் எவ்வாறு அப்புறப்படுத்துகின்றன என்பதை கண்காணித்தல், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தல் மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள “பிணவறைக்கூடம்”த்தின் தரத்தை ஆய்வு செய்தல்.

இது போன்றவற்றைக் கொண்டு நோய் தீவிரமாகப் பரவும்போது அதைத் தடுப்பதில் தீவிரம் காட்டும் சுகாதாரத்துறை, நோய் தோன்றக் காரணமாக இருக்கும் விவாகரத்தில் கண் மூடி இருக்கக்கூடாது. நோய் வந்தபின் சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும் நோய் வராமலே தடுப்பதுதான் செலவையும், வலியையும், பதற்றத்தையும், அலைச்சலையும், இழப்பையும் தவிர்க்கும்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தி கடுமையான நடவடிக்கையாக “அபராதம் விதித்தல்” தேவைபட்டால் அவர்களின் “உரிமங்கள் ரத்து செய்தல்” போன்றவை அதிரடியாக எடுக்க வேண்டும் என்பதே அதிரைப்பட்டினம் வாழ் சமூக ஆர்வலர்களின் அவசரக் கோரிக்கையாகும்.சேக்கனா M. நிஜாம்


இறைவன் நாடினால் ! தொடரும்..............
Share:

புதிய உதயம் கிராணி ஸ்டோர் !!

முன்பெல்லாம் வெளிநாடு வெளிநாடு என்ற மோகம் நம்மிடையே தலைவிரித்தாடியது ஆனால் சமிப காலங்களாக அதிரையர்கள் தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் .சென்னை மண்ணடியில் மட்டும் நமதூர் வாசிகளின் கடைகள் முளைக்க தொடங்கியுள்ளன இது காலம் கடந்த செயல் என்றாலும் பாராட்ட தக்கவையே.

அந்த வரிசையில் சமிபத்தில் அதிரையில் பிரசித்தி பெற்ற கிராணி மளிகை தற்பொழுது சென்னையில் உதயமாகி யுள்ளது.
இதில் இல்லத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்கள் உணவு பொருட்கள் அனைத்தும் நியாயமான விலையில் கிடைக்கும் என்கிறார் அந் நிறுவத்தின் உரிமையாளர் இர்பான் ...

குறிப்பாக அதிரை மக்களுக்கு ஆர்டரின் பேரில் இலவச டோர் டெலிவரி செய்யப்படும் (மன்னடி மட்டும்)என கூறினார் .

வெளிநாடு வெளிநாடு என மோகம் கொள்ளமால் உள்  நாட்டிலேயே தொழில் வாய்ப்பை உருவாக்கி வரும் நமதூர் இளைஞர்களுக்கு கைகொடுப்போம். 

குறிப்பு: மின்னஞ்சல் வழியாக ஆர்டர் செய்தால் உங்கள் இல்லம் நாடி பொருட்களை அனுப்பி வைக்கப்படும்.

முகவரி :
கிராணி ஸ்டோர் 
61 ,சாலை  விநாயகர்  கோவில் தெரு  ,
மன்னடி ,சென்னை 01

போன் : 96 00000 481
email :   kiranitraders@gmail.com

Share:

கூகிள் பேராண்டிக்கு “அப்பா” எழுதுவது.....

வசதியாகத்தான் இருக்கிறது பெயரனே…
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது !

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன் !

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன் !

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்…
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு…
உறவுகள் இதுதானென்று !


"குடை" அப்பா


நன்றி : மின்னஞ்சலில் அனுப்பிய அடக்கமான "அப்பா" வுக்கு
Share:

இனியாவது சாதிப்பார்களா...?

நடந்து முடிந்த +2 மற்றும் SSLC தேர்வுகளில் நமதூர் மாணவிகள்,  அதிக மதிப்பெண்கள் பெற்று மாணவர்களை  ஓரம் கட்டியதை அறிந்தோம். 'ஒருகாலத்தில்' (என்ன கொடும சார் இது!) படிப்பிலும் விளையாட்டிலும் கோலோச்சிக் கொண்டிருந்த மாணவர்கள், சமீப வருடங்களாக படிப்பில் கோட்டை விட்டதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும் முக்கிய காரணமாக அவர்களின் கவனம் திசைதிருப்பப்பட்டதே என்பதும் அவற்றில் செல்ஃபோன், ஐபிஎல் கிரிக்கெட் ஆகியவை முக்கிய காரணமாக இருக்கிறது என்பதும் பலரும் அறிந்த உண்மை. 

செல்ஃபோன், விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம்  இல்லாத மாணவர்களும்கூட மதிப்பெண்களில் கோட்டை விட்டதற்கு என்ன காரணம் என்று பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்த வகையில் சில 'பயங்கர' உண்மைகள் நமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன.  இவற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லாத பெற்றோர்களின் கவனத்திற்கு இதைக் கொண்டுவர விரும்புகிறேன்.

பொதுவாகவே +2 மற்றும் SSLC மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவது வழக்கம். சில பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே SSLC பாடங்களையும்,+1 தொடக்கத்திலேயே +2 பாடங்களை நடத்தி அதிக மதிப்பெண் பெற   வைப்பதும்கூட உண்டு.ஆனால் நமது கல்வி நிலையங்களில் இத்தகைய நிலை இல்லை.எனினும்,  இணைய யுகத்தில் பள்ளியின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கப்படுவதால் சிறப்பு வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் தங்களால் முடிந்தவரை அதிகபட்ச இறுதி   முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

மாணவர்களை செம்மைப்படுத்த கண்டிப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்களிடம், 'சென்னை மாணவன் ஒருவன்  வகுப்பு   ஆசிரியையை வகுப்பறையில் "கொலை செய்ததுபோல்" அதை   காரணம்காட்டி சில முரட்டு   மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டியதாகவும் நம்பகமான ஆசிரியர் ஒருவர் கவலையுடன் சொன்னார்.

அவ்வாறு உணர்வு வயப்பட்டு,மதியிழந்து அறிவற்ற முறையில் செயல்பட்ட விடலை மாணவர்கள் சிலரை மேற்கொண்டு   கண்டிக்கவும் முடியாமல், மாணவர்களின் எதிர்காலம் அல்லவா? என நமக்கேன் வம்பு என விலகவும் முடியாமல் தவித்துள்ளனர் சில ஆசிரியர்கள்.

+2 தேர்வுகள் நடந்து கொண்டிருந்தபோது SSLC மாணாக்கர்களுக்காக சிறப்பு வகுப்புகளுக்கு வேறொரு பகுதியில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும்,பல மாணவர்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதோடு அவ்வாறு சிறப்பு வகுப்புகளுக்கு 'வந்தாக வேண்டும்' என்று கண்டிப்புடன்  கூறியதோடு   மட்டுமல்லாமல், பெற்றோர்கள் கூட்டத்தில் பலமுறை எடுத்துக் கூறியும் ஒரு மாணவர்கள் கூட சிறப்பு வகுப்புக்கு வராதது குறித்தும் இதற்கு பெற்றோரும் ஒத்துழைக்கவில்லையே! என மிகுந்த மனசங்கடத்துடன் தெரிவித்தார் அந்த ஆசிரியர்.

இப்பேர்பட்ட மாணவர்கள்தான்  தற்போது கோட்டைவிட்டு   நிற்கிறார்கள்  என்பதை உணர வேண்டும். மேலும் இதுபோல் வாய்துடுக்காகப்பேசும் மாணவர்களைப்பற்றி பெற்றோர்களுக்கு  தெரிவித்து   மென்மையாக அறிவுரை கூறுவதும் அவசியம்.  மாணவப்பருவத்தின் உன்னதத்தை உணரச்செய்யும் நோக்கில் மிகக்ககவனமாகக் கையாள வேண்டும்.

அரசின் சமச்சீர் கல்விக்கொள்கை குளறுபடியால் காலாண்டுகள் புத்தகங்களின்றியே வகுப்பறையில் கழித்த மாணவர்களே! நீங்கள்தான் வல்லரசாகப்போகும் இந்தியாவை நல்லரசாகவும் மாற்ற வேண்டியவர்கள் என்று கனவுகண்டு கொண்டிருக்கிறோம். SSLC முடித்த பிறகு அதிகபட்சம் 5-6 வருடங்கள்தான் பள்ளி/கல்லூரி படிப்பு. அந்த இனிய நாட்களைத் தொலைத்துவிட்டு என்னதான் நீங்கள் தலைகீழாக நின்றாலும் இழந்த அந்தநாட்களும் பசுமைமாறாத அனுபவங்களும் மீண்டும் கிடைக்காது.

ஆண்டுக்கு பள்ளி வேலைநாட்கள் 200 என கொண்டாலும் தினம்  5  மணி நேரம் என்ற வகையில் ஆண்டுக்கு 1000   மணிநேரங்கள்தான் பள்ளியில் கழிக்கிறீர்கள். அதாவது ஒருநாளில் படிப்புக்காகச் செலவிடும் நேரம் 21% மட்டுமே.ஹாஜிசார் சொல்வதுபோல் கணக்கிட்டால் ஓராண்டில் 8760 மணி நேரத்தில் 1000 மணி நேரம்போக மீதியுள்ள 7760 மணி நேரங்கள் உள்ளன. இதில் தூங்குவதற்காக எட்டு மணி நேரம் என்று கொண்டாலும் 2920 மணிநேரங்கள் போக மீதி 4840 மணிநேரங்கள் "சும்மா" தான் இருக்கிறீர்கள் மாணவர்களே!

அதனால் கொஞ்சம் ஊர்சுற்றுவதைக் குறைத்து உங்கள் வருங்காலத்திற்காக சற்று கூடுதல் நேரம் ஒதுக்கினால் "மதி" ப் "பெண்கள்" என்பதெல்லாம் பெண்களுக்கானது  (மாணவிகளுக்கானது)  என்று யாரும் தவறாக நினைக்காமல் இருப்பார்கள்!


-ஜாஃபர்
Share:

சென்னை : மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து

சென்னை : மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து
First Published : 27 Jun 2012 02:34:22 PM IST

Last Updated : 27 Jun 2012 03:14:02 PM IST
சென்னை, ஜூன் 27 : சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்த 17M மாநகரப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 15 பேர் ராயப்பேட்டை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் பிரசாத், நடத்துநர் ஹேமச்சந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் வடபழனியைச் சேர்ந்த முருகன், ராணி, பல்லவன், பானுப்ரியா உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்ணா மேம்பாலத்தின் அருகே உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தின் அருகே செல்லும் சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை ஆணையர் திரிபாதி சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். கவிழ்ந்துள்ள பேருந்தை நிமிர்த்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் வளர்மதி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். பாண்டிபஜார் காவல்துறையினர் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து கவிழ்ந்து விழுந்ததும், பேருந்தில் இருந்து புகை கிளம்பியதும், பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு போன் செய்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வாகனம் தண்ணீர் அடித்து புகையை நிறுத்தியுள்ளனர். பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட பயணிகளை, பொதுமக்கள் பலரும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியே மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Share:

அதிரை ஸலாஹிய்யா மத்ரஸா 113 வது ஆண்டு விழா மற்றும் மௌலவி ஆலிம் & காரி பட்டமளிப்பு விழா


ஸலாஹிய்யா மத்ரஸா 113 வது ஆண்டு விழா மற்றும் மௌலவி ஆலிம் & காரி பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

இடம்:காதிர் முகைதீன் கல்லூரி வளாகம்

நாள்:  27-06-12, புதன்கிழமை

நேரம்:காலை:  9:00 மணி 

தலைமை: மௌலானா மௌலவி அல்ஹாஜ் L.M.S. அப்துல் காதர் ஆலிம் அவர்கள்,

முன்னிலை:    ஜானப் Dr s. முஹம்மது அஸ்லம் D.Lit., அவர்கள்

(செகரட்டரி,MKN,மத்ரஸா டிரஸ்ட்  அதிரை.)

பட்டமளிப்பு பேருரை:  S.S. ஹைதர் மிஸ்பாஹிஹஜ்ரத் அவர்கள்
(முதல்வர்,உஸ்மானிய்யா மத்ரஸா,மேலப்பாளையம்)

சிறப்புரை:மௌலான மௌலவி  அல்ஹாஜ் K.T. முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்கள், (முதல்வர் ரஹ்மானிய்யா மத்ரஸா,அதிரை.)

மௌலான மௌலவி  அல் ஹாபிழ் M.G.முஹம்மது ஸபியுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள், (பேராசிரியர் ஸலாஹிய்யாமத்ரஸா அதிரை.)

ஸலாஹி ஆலிம் (பட்டம் பெரும் மௌலவிகள்)
மௌலவி M.B. அஹ்மத் ஸலாஹி
(த/பெ M.Y.முஹம்மது பாக்கர்
அதிரை)

மௌலவி M.அப்துல் ஹமீது ஸலாஹி
(த/பெ S.S.மைதீன் மொன்னா முஹம்மது
கல்லிடைக்குறிச்சி,திருநெல்வேலி.)

நன்றியுரை:ஜனாப் A.S.M.அஹ்மது  கபீர் அவர்கள்,
மேனேஜர், ஸலாஹிய்யா மத்ரஸா.
அதிரை.

இவ்விழாவிற்கு  அனைவரும் வருகை தருமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இங்ஙனம்,
செயலர் மற்றும்  அறங்காவலர்கள், MKN,மத்ரஸா டிரஸ்ட் ,முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.
ஸலாஹிய்யா மத்ரஸா,அதிரை

Share:

நல்ல தமிழ் எழுதுவோம் – 18‘தமிழ்’ எழுதுவது, அதைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவர்க்கும் இயலுமானது.  ஆனால், ‘நல்ல’ தமிழ் எழுதுவது, அதன் மீது ஆர்வமும் பயிற்சியும் திறமையும் கொண்டவர்களால் மட்டுமே இயலுமானதாகும்.  அத்தகையவர்களாக நாமனைவரும் ஏன் ஆகக் கூடாது?

இத்தொடரை எழுதத் தொடங்கியது முதல், நம்மவர்கள் செய்யும் பல தவறுகளையும் மொழிப்பிழைகளையும் ஒருசில புதிய தகவல்களையும் சுட்டிக் காட்டி வந்துள்ளேன்.  ஆனால், அவற்றுக்காகப் பின்னூட்டமிட்டுப் பாராட்டியவர்கள், தாம் முன்பு செய்த மொழிப்பிழைகளை இன்னும் செய்துகொண்டே இருப்பது என் கண்களை உறுத்துகின்றது.  எனவே, அவர்களின் அண்மையப் பதிவுகளிலிருந்து சிலவற்றை எடுத்துக் காட்டலாம் என்று விழைகின்றேன்.

“தலையில் தேய்த்துக் குளிப்பதற்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய். இவை உடல் சூட்டைத் தணிக்கும் என்பது கூடுதல் சிறப்பு.”

இதில் என்ன தவறு என்கிறீர்களா?  ஒருமையில் முடிந்த (நல்லெண்ணெய் என்ற) சொல்லைத் தொடர்ந்து (‘இது’ என்ற) ஒருமைச் சொல்லே வந்திருக்கவேண்டும்.  ஆனால், ‘இவை’ என்று இடம்பெற்றுள்ளது!  இதுதான் இங்குள்ள தவறு.

இக்கட்டுரையைப் பாராட்டி வந்த பின்னூட்டங்களுள், “குற்றாலஞ் சென்றுக் குளித்த வுணர்வுடன்” என்ற கவிதையடியும் ஒன்று.  இதில் ஏற்பட்டுள்ள தவறு யாது?  ‘சென்றுக் குளித்த’ என்பதில், தேவையின்றி ஓர் ஒற்றெழுத்து (க்) மிகுந்துள்ளது.  அதாவது, ‘சென்று குளித்த’ என்றிருக்கவேண்டும்.  ஏன்?  தமிழிலக்கண விதிகளின்படி, வினைத்தொகையின் பின் ஒற்று மிகாது.  இங்கு, ‘சென்று’ என்ற வினைத்தொகை இடம்பெற்றுள்ளது. இவ்வினைத்தொகையின் பின் வருமொழியாக உள்ள ‘குளித்த’ எனும் சொல்லுக்கு முன் ‘க்’ வரக் கூடாது.  இதுவே இங்கு ஏற்பட்ட தவறு.

அடுத்து ஒரு கட்டுரையில், “உற்றத்தோழர்கள், வேலைப்பார்க்கும், உறுதிச் செய்துள்ளனர். தொடர்ந்துக்கொண்டு” – என்று இப்படி, தேவையற்ற இடங்களில் (த், ப், ச், க்) ஒற்றெழுத்துகள் மிகுந்து வந்துள்ளன.  இவை முறையே, ‘உற்ற தோழர்கள், வேலைபார்க்கும், உறுதி செய்துள்ளனர், தொடர்ந்துகொண்டு’ என்று சரியாக எழுதப்பெற வேண்டும்.
  
ஒற்றெழுத்து அல்லது வல்லெழுத்து அல்லது புள்ளி எழுத்து மிகுதல் அல்லது மிகாமை குறித்துத் தமிழறிஞர்கள் நகைச் சுவையோடு ஓர் எடுத்துக்காட்டினைக் கூறுவதுண்டு.

“பெண்மையுடைய பெண்களெல்லாம்” என்றும், “பெண்மையுடையப் பெண்களெல்லாம்” என்றும் எழுதியதில் உள்ள வேறுபட்ட கருத்துகளை ஆழ்ந்து நோக்குவோர் நன்கு அறிய முடியும்.  முதலாவதில், பெண் தன்மையுள்ள பெண்களெல்லாம் எனும் கருத்து பெறப்படுகின்றது.  இரண்டாவதில், பெண் தன்மை ஒழிந்துபோக இருக்கும் பெண்கள் எல்லாம் என்ற மாறுபட்ட கருத்து பெறப்படுகின்றது!   

இதுபற்றித் தெளிவாகவும் விரிவாகவும் தெரிந்துகொள்ள விழைவோர், ஒற்று மிகுதல், ஒற்று மிகாமை பற்றிய எனது முந்திய பதிவை மீள்பார்வை செய்யுங்கள்.  கவிதைகள் எழுதும் கவிஞர்கள்கூட இதற்கு விலக்கில்லை!   அவர்களின் ஆக்கங்கள் print mediaவில் வருவதற்கு முன் திருத்திக்கொள்ளட்டும்.  

“ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்றால், பல சொற்களை அடுக்கி எழுதப் பழக்கிக் கொள்வது என்று ஆகாது.  எந்த மொழியைக் கற்கிறார்களோ, அந்த மொழிக்குரிய இலக்கண முறைப்படி, மரபு தவறாது சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.  இது யாருக்கும் இயற்கையாக உண்டாகாது.  இயல்பாக வரவேண்டுமாயின், மொழிப் பயிற்சியில் மிகையான உழைப்பு வேண்டும்” என்கிறார் மொழி இயல் வல்லுனரான ஆட்டோ ஜெபர்சன்.

நல்ல தமிழ் எழுத, வலி மிகுதலும் வலி மிகாமையும் பற்றிய அறிவு மிகவும் இன்றியமையாதது.   இதில் நல்ல பயிற்சி செய்துவந்தால் நாளடைவில் நமது எழுத்தை நாமே ஆளலாம்.  அதாவது, எழுத்தாளராகலாம்.


- திருத்தங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்...

- அதிரை அஹ்மது


Share:

முஹம்மது முர்ஸி - அரபுலகிற்கும், எகிப்திற்கும் புதிய சகாப்தம்

Protesters chant slogans against the military council at Tahrir Square in Cairo. Photograph: Asmaa Waguih/Reuters


‘அரபுலகிற்கும், எகிப்திற்கும் புதிய சகாப்தம்’ என முஹம்மது முர்ஸியின் தேர்தல் வெற்றியை தாய் அமைப்பான இஃவானுல் முஸ்லிமீன் இவ்வாறு வர்ணித்தது.

புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் முபாரக்கிற்கு பிறகு அவரது மிச்ச சொச்சங்களா? அல்லது முபாரக்கிற்கு எதிரான மக்கள் குடியரசா? என்பதற்கான பதிலை ஞாயிற்றுக்கிழமை உலகமுழுவதும் உள்ள இஸ்லாமியவாதிகள் மிகுந்த பரபரப்புடன் உற்றுநோக்கிய அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை எகிப்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது.

ஏறக்குறைய நிச்சயிக்கப்பட்டிருந்தது முர்ஸியின் வெற்றி.

முன்னாள் இஃவான் உறுப்பினர் அப்துல் ஃபத்தூஹ் உள்பட இஸ்லாமிய கட்சிகள் மற்றும் மதசார்பற்ற, சோசியலிச கட்சிகளின் வேட்பாளர்களுடன் போட்டியிட்டு, ஊடகங்களின் தவறான பரப்புரைகளுக்கும் மத்தியில் முர்ஸி முதல் கட்ட தேர்தலிலேயே 24 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். 2-ஆம் கட்ட தேர்தலில் நாட்டின் அனைத்து இஸ்லாமிய கட்சிகளின் ஆதரவையும் உறுதிச்செய்த பிறகே அவர் முபாரக்கின் கடைசி ஆட்சிக்காலத்தில் பிரதமராக இருந்த அஹ்மத் ஷஃபீக்கை எதிர்த்து களமிறங்கினார்.

எகிப்தில் உள்ள அனைத்து முபாரக் ஆதரவாளர்களுக்கும், முபாரக்கிற்கு எதிரான ஜனநாயகத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையேயான போட்டியாகவே முர்ஸி-ஷஃபீக் போட்டி சித்தரிக்கப்பட்டது.

முற்றிலும் எதிர்பாராத விதமாகவே முர்ஸி அதிபர் வேட்பாளராக தேர்வுச் செய்யப்பட்டார். இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரும், இஃவானின் துணைத் தலைவருமான ஃஹைராத் அல் ஷாத்திரை தேர்தல் கமிஷன் முபாரக் காலத்தில் சிறைத் தண்டனையை அனுபவித்ததை காரணம் காட்டி தகுதியிழக்கச் செய்ததன் விளைவாக மாற்று வேட்பாளரான முர்ஸி அதிகாரப்பூர்வ வேட்பாளாரானார்.

தேர்தல் பிரச்சாரத்தின் முதல் கட்டத்தில் முஹம்மது முர்ஸியால் வாக்காளர்களை கவர முடியுமா? என்பது சந்தேகம் எழுந்தது. ஆனால், எகிப்தின் வரலாற்றில் நடந்த முதல் சுதந்திர தேர்தலில் மக்கள் முர்ஸிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

புரட்சி சீர்குலைக்கப்படுமா? என்ற சந்தேகம் தற்பொழுதும் நிலவினாலும், இஃவான் கூறியது போலவே எகிப்தை பொறுத்தவரை இத்தேர்தல் ஒரு புதிய சகாப்தம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

முஹம்மது முர்ஸி ஈஸா அல் அய்யாத் 1951-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி எகிப்தின் ஷரகியாவில் பிறந்தார். கெய்ரோ பல்கலைக்கழகத்தில் எஞ்சீனியரிங்கில் பட்டமும், பட்ட மேற்படிப்பும் முடித்த முர்ஸி 1982-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர்(டாக்டர்) பட்டத்தைப் பெற்றார். மேலும் அங்கு 3 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றினார்.
1985-ஆம் ஆண்டு பிறந்த நாட்டிற்கு திரும்பிய பிறகே முஹம்மது முர்ஸி இஃவானுல் முஸ்லிமீனின் தலைமையுடன் நெருக்கத்தை ஏற்படுத்தினார். மேலும் இஃவானில் தீவிரமாக பணியாற்றத் துவங்கினார்.

2000-05 காலக்கட்டத்தில் இஃவானுல் முஸ்லிமீனின் ஆதரவுடன் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார் முர்ஸி. இக்காலக்கட்டத்தில் அவரது செயல்பாடுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2011-ஆம் ஆண்டு ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி துவக்கும் வரை இஃவானுல் முஸ்லிமினீன் தலைவர்களில் ஒருவராக இருந்தார். பல வருடங்களாக நீண்ட ஏகாதிபத்திய ஆட்சிக்கு முடிவுக் கட்டிய மக்கள் புரட்சியைத் தொடர்ந்து உருவான இஃவானின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சிக்கு முர்ஸி முதல் தலைவரானார்.

எகிப்தின் வரலாற்றில் மிக நீண்டகாலமாக சித்திரவதைகளையும், துயரங்களையும் அனுபவித்த இஃவானுல் முஸ்லிமீனுக்கு முர்ஸியின் வெற்றி இறைவன் அளித்த ஆறுதலாகவே நாம் கருதுவோம்.

எகிப்து எதிர்கொள்ளும் சவால்களையும், அண்மையில் உள்ள ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளையும், ராணுவத்திடமிருந்து உருவாகும் இடையூறுகளையும் சமாளித்து முஹம்மது முர்ஸி எகிப்தின் சிறந்த அதிபராக திகழவும், எகிப்தில் ஏற்பட்ட மாற்றம் முஸ்லிம் உலகில் ஒரு நம்பிக்கை ஒளியாக மாறவும் வல்ல இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!-நன்றி அ.செய்யது அலீ
Share:

அதிரை(ப்) புலவர் “அண்ணாவியார்”அதிரைப்பட்டினம் - இது, கத்தும் கடல் சூழ் நாகையிலிருந்து தெற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் சேது பெருவழிச் சாலையில் அமைந்திருக்கும் கடற்கரை ஊர். சுருக்கி அழைக்கப்படுவதோ அதிரை. தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்த காலத்திலிருந்தே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பயணிகள் அனைவரும் தங்கிச்செல்லும் பெருவழித் துறையாகவும் பழம்பெரும் துறைமுகப்பட்டினமாகவும் இலங்கியதாக அதிரை அறிஞர் தமிழ்மாமணி புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கு காதிர் முஹைதீன் கல்லூரியும், அரபி மதரஸாக்களும், வணிகப் பெருமக்களும் வாழுகின்ற ஊர் என்பது பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்குத் தெரியுமே தவிர சிறந்த இசுலாமியப் புலவர் பெருமக்களை தமிழுக்கு அளித்த ஊர் என்று ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அத்தகையோரில் அண்ணாவியார் ( ANNAVIYAR ) என்று அழைக்கப்படும் புலவரும் ஒருவர்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்தவர்கள் ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள். இவர்கள் கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள். நவரத்தினகவி காதிர் முகைதீன் அண்ணாவியார் அவர்களின் பேரரும் ஹபீப் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மூத்தமகனும் ஆவார். 1902’ல் பிறந்து 1992 வரை தொன்னூறு ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா. தம் முன்னோர்கள் எழுதி ஓலைச்சுவடிகளாக இருந்த பாடல்களை புத்தகவடிவில் ஆக்கியவர்கள். தம்முன்னோர்களைப் போலவே சிறந்த தமிழறிஞர், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பண்பாளர்.

தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சீறிய எண்ணம் கொண்ட இம்மூதறிஞர் தம் முப்பாட்டனார் அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் மற்றும் அவர்கள் வழிதோன்றல் புலவர்கள் அனைவர்களது பாடல்களையும் ஓலைச்சுவடியிலிருந்து நூல் வடிவமாக மாற்றி நம் கையில் தவழவிட்டவர். "சந்தாதி அசுவகம்" - இது 4300 பாடல்களைக் கொண்ட தொகுப்பு இதை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மனமுவந்து பெற்று வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் பாட நூலாகவும் ஆக்கியுள்ளது. இவர்களது சேவையைப் பாராட்டி சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொற்கிழி அளித்து பெருமைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஆய்வு தொடரும்...........

நன்றி : ஹமீத் ஜாஃபர்
தகவல் : N.K.M. அப்துல் வாஹித் அண்ணாவியார் ( New York )
புகைப்படம் உதவி : N.K.M. அப்துல் வாஹித் அண்ணாவியார் ( New York )
Share:

பிரனாப் வந்தால் கம்பன் வருமா?

விசயம் கொஞ்சம் காதைச் சுற்றி மூக்கைத் தொடும் வகையானதுதான். எனினும், சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது.

காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரனாப் முகர்ஜிக்கு,மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பாணர்ஜி ஆதரவளிக்க மறுத்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தல் முடிவுக்குப்பிறகு மம்தா ,  காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகத்தை மம்தா பாணர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சி வைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகினால் அந்த அமைச்சகப் பதவியையும் கைவிட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி ஒருநிலை ஏற்பட்டால், அப்பதவி முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

டி.ஆர்.பாலு அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சராகும் பட்சத்தில் வடசேரியிலுள்ள அவரது சாராய ஆலைக்கு வசதியாக பட்டுக்கோட்டை-மன்னார்குடி இடையேயான புதிய ரயில் வழித்தடம் கொண்டுவரப்படுவதற்கு சாத்தியம் இல்லாமலில்லை. நமது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவுள்ள மான்புமிகு திரு.பழனி மாணிக்கம் அவர்கள் இதை விரும்பாவிட்டாலும், பட்டுக்கோட்டை-திருவாரூர் ரயில் வழித்தடப் பணிகளைத் துரிதப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எப்படியோ, ஜனாதிபதியாக பிரனாப் முகர்ஜி வெற்றிபெற்று, மம்தா காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, மத்திய ரயில்வே அமைச்சராக டி.ஆர் பாலு அவர்கள் பொறுப்பேற்கும் பட்சத்தில்,நமதூரிலிருந்து சென்னைக்கு ரயில்வழி போக்குவரத்துப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டால் நல்லது.

ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதையைப் பிடுங்கி எடுத்துவிட்டு "உள்ளதும் போச்சடா" என்று புலம்ப வைத்துவிட்டார்கள். என்ன செய்வது நம்நாட்டில் அதற்காகவாவது சுதந்திரம் உள்ளதே!  என்று சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்
Share:

மரண அறிவிப்பு(ஹாஜி. S. உமர் தம்பி கடல்கரைத்தெரு)

அஸ்ஸலாமு அலைக்கும்,

 நமதூர் கடற்கரை தெரு மர்ஹூம் M.S.A. முஹம்மது ஷரீஃப்  அவர்களின் மகனும்,மர்ஹூம் S. நெய்னாமுஹம்மது மற்றும் S.ஹாஜா முஹைதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் O.K.M.நெய்னா முஹம்மது, மர்ஹூம் V.A காதர் ஆகியோரின்  மைத்துனரும், O.K.M.  சுப்ஹதுல்லா (பைத்துல்மால் பொருளர்), K.S. ஷர்ஃபுதீன், S.ரஃபீக் அஹ்மது (RIYAD) மற்றும் M.S.ஹிதாயத்துல்லாஹ் (குவைத்) ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி. S. உமர் தம்பி (துணை பதிவாளர், (ஓய்வ) தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கி- பட்டுக்கோட்டை) அவர்கள் இன்று (ஜூன் 24, 2012) ஞாயிற்றுக் கிழமை அசருக்கு பின் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

ஜனாஸா விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 அன்னாரது மஃபிரதுக்காகவும், குடும்பத்தினருக்கு இப்பேரிழப்பை தாங்கும் மன சக்தியையும் வழங்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச்  செய்வோமாக. ஆமின்
 
 தகவல் :
 O.K.M.N.Fathhuddeen
Share:

மரண அறிவிப்பு


புதுமனைத்தெருவை சேர்ந்த முஹம்மது சம்சுதீன், ரஜாக் ,மன்சூர் ,இலியாஸ்,அனஸ்,ஆகியோரின் தகப்பனாரும் சரபுதீன், ஹாரூன், ஜெசிம் (வக்கீல்) இவர்களின் மாமனாருமாகிய ஹாஜி அப்துல் கபூர் (துவர்பாக்)  அவர்கள் இன்று மாலை 3.45 மணிக்கு அவரது வாய்கால் தெரு விட்டில் வாபதாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.00மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில்  நல்லடக்கம் செய்யப்படும் 


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"


எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்       ,

Share:

“குளு” “குளு” குற்றாலம் !
ஜூன் மாதம் தொடங்கிவிட்டாலே குளுமையை விரும்புவோரின் நினைவுக்கு வருவது "குளு குளு குற்றாலம்'தான். ஆகஸ்ட் மாதம் இறுதிவரை ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் குவியும் ஒரே இடமாகத் திகழ்வது குற்றாலம் மட்டுமே.

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொஞ்சி உறவாடிக்கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இ.ந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இச்சாரல் விழும் இக்காலகட்டத்தைக் "குற்றால சீசன்' என அழைப்பார்கள். குற்றாலச் சாரல் சுற்றுவட்டாரப் பகுதி மக்களையும் மகிழ்விப்பது உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மூலிகைச் செடி கொடிகளில் கலந்து வருவதால் குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீருக்குத் தனி மவுசு உண்டு. இங்குள்ள அருவிகளில் குளிப்பதே தனி சுகம். ஒரே நாளில், எத்துணை முறை, எத்துணை அருவியில், எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொண்டு குளிக்கலாம் சலிப்பே வராது என்பது கூடுதல் சிறப்பு.

இவை அதிரைப்பட்டினத்திலிருந்து ஏறக்குறைய 357 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், தென்காசியில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது.

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மொத்தம் 9 அருவிகள் உள்ளன. இவற்றில் பாலருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவை தவிர மற்ற 6 அருவிகளும் மக்கள் அதிகம் விரும்பும் அருவிகளாக உள்ளன. குறிப்பாக, பேரருவியில் அதிகக் கூட்டம் காணப்படுவது உண்டு.

பேரருவி: "மெயின் பால்ஸ்” என அழைக்கப்படும் பேரருவிதான் குற்றாலத்தில் பிரதானமானது. தண்ணீர் அதிகம் வரும் காலங்களில் இந்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்படும். பெண்கள் குளிக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

செண்பகா அருவி: பேரருவியில் இருந்து மலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருவிக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதால் பல கட்டுப்பாடுகள் உள்ளன.

தேனருவி: செண்பகா அருவியின் மேல் பகுதியில் உள்ள தேனருவியின் அருகே பாறைகளுக்கு நடுவில் அதிக அளவில் தேன்கூடுகள் காணப்படும். இதனால் தேனருவி என அழைக்கப்படுகிறது. மிகவும் அபாயகரமான இந்த அருவியில் குளிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவி: பேரருவிக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்புவது ஐந்தருவியைத்தான். பேரருவியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த அருவி, ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழுவதால் “ஐந்தருவி” என அழைக்கப்படுகிறது. இதில், பெண்கள் குளிப்பதற்கென்று ஒரு கிளை அருவியும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்காக மூன்று கிளை அருவிகளும் உள்ளன. ஐந்தாவது கிளையில் தண்ணீர் வருவது குறைவு.

பழத்தோட்ட அருவி: “முக்கியஸ்தர் அருவி” என்ற பட்டப் பெயரோடு அழைக்கப்படும் இந்த அருவி, ஐந்தருவியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வி.ஐ.பி.களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சாதாரண மக்கள் இந்த அருவியின் அருகில் செல்லவே முடியாது.

பழைய குற்றால அருவி: குற்றாலம் பேரருவியில் இருந்து கிழக்கு பகுதியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பழைய குற்றாலம். பேரருவியிலும், ஐந்தருவியிலும் குளிப்பவர்கள் நிச்சயமாக பழைய குற்றால அருவியிலும் நீராடிச் செல்வது வாடிக்கை.

படகு சவாரி: ஐந்தருவிக்கு அருகே அமைந்துள்ள குளத்தில் படகு சவாரி செல்வது தனி சுகம். இந்தக் குளம் விவசாய குளம் என்பதால் சீசன் காலங்களில் மட்டும் படகு சவாரி நடைபெறும்.
மஸ்ஜீத் ஜாமிஆ : சில வருடங்களுக்கு முன் புதிய பொலிவுடன் புதுப்பிக்கப்பட்ட இம் மஸ்ஜித்தால் இச்சுற்றுலாத் தளத்திற்கு வந்துசெல்லும் முஸ்லீம் சகோதரர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாகவும், ஏறக்குறைய ஐந்து ஆயிரம் பேர் அமர்ந்து தொழக்கூடிய பகுதியையும் பெற்றுள்ள இவை ஐந்தருவிச் செல்லும் பாதையில் அமையப்பெற்றுள்ளது.

சாரல் திருவிழா : ஆண்டுதோறும் "சீசன்' காலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பில் ஒரு வார காலம் பல்சுவை விழாவாக "சாரல் திருவிழா' என்ற பெயரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மூலிகை எண்ணெய் : தலையில் தேய்த்துக் குளிப்பதற்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய். இது உடல் சூட்டைத் தணிக்கும் என்பது கூடுதல் சிறப்பு. இங்கே விற்பனை செய்யப்படுகிற சந்தனாதி தைலம், அரைக்கீரை தைலம், பொன்னாங்கன்னி தைலம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் வாங்கி நமது உடலில் நன்றாகத் தேய்த்தும் குளிக்கலாம். இந்த மூலிகை எண்ணெய்களில் "போலி'கள் ஏராளம் என்பதால் கவனத்துடன் வாங்க வேண்டும்.

பழங்கள் : குற்றாலத்தில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழங்களான மங்குஸ்தான், ரம்டான், துரியன், முட்டைப்பழம், மனோரஞ்சிதம் பழம் போன்ற பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஹல்வா : “இருட்டுக்கடை” அல்வா, சுடச்சுட “திருநெல்வேலி” அல்வா, “மஸ்கோத்” அல்வா போன்றவைகளும், பல்வேறு சிப்ஸ் வகைகளும், நறுமணமிக்க மசாலா பொருட்களும், கருப்பட்டி, பனங்கல்கண்டு, மலைத்தேன், திருவில்லிபுத்தூர் பால்கோவா போன்றவைகள் கிடைக்கின்றன.


கவனத்தில்கொள்ள வேண்டியவை :
1. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியாகவுள்ள குற்றாலத்தில் பொது சுகாதாரச்சட்டம் 1939 பிரிவு 84, 85 மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011’ன் படி பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த அல்லது சேமித்து வைக்க தடை செய்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. சுற்றுலா பயணிகள் தங்குவதற்கென்று அரசு விடுதிகள் மற்றும் தனியார் விடுதிகள் ஏராளமானவை உள்ளன. மேலும் குடும்பத்துடன் தங்குவதற்கென்று சமையல் வசதிகளுடன் கூடிய வீடுகளும் தின வாடகைக்கு கிடைக்கின்றன. இவற்றில் தங்குவதற்கு அதிகபடியான கட்டணம் வசூல் செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க முன்வர வேண்டும்.

3. சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கிடும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் “விலை மற்றும் பொருட்களின் தரம் “ போன்றவற்றை கண்காணிக்க முன்வர வேண்டும்.

4. குற்றாலம் அருவி பகுதிகளில் காலாவதியான உணவு பொருட்கள், தரமற்ற தண்ணீர் பாட்டில்கள், அழுகிய பழங்கள் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகின்றனவா ? என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

5. குற்றவியல் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு பணிகளை காவல்துறையினர் மேலும் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதிரைப்பட்டினத்திலிருந்து வழித்தடம் ?
பஸ் ரூட் : பட்டுக்கோட்டை – மதுரை – தென்காசி – குற்றாலம்
ட்ரைன் ரூட் : 1. தஞ்சை – திருநெல்வேலி , 2. திருச்சி – தென்காசி
பயணச்செலவுகள் :  “ப்ளீஸ்” அதே மட்டும் கேட்காதிங்க...

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....
Share:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது?
பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் தான் மிஞ்சும் 

அவர்களின் ஆரோக்கிய இழப்பின் காரணங்களாக பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றன:
1.மோசமான பணி சூழல்
2.மோசமான வாழ்க்கை சூழல்
3.சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை
4.பணி ஒப்பந்தங்களில் பிறழ்வு
5.பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஆகியவற்றின் காலாவதி முடியும் வேளையில் சந்திக்கும் பிரச்சனைகள்
6.ஏஜண்டுகளின் ஏமாற்று வேலைகள்
7.குடும்பத்தினரின் பிரிவு
8.கடன் உள்ளிட்ட பொருளாதார ரீதியான பிரச்சனைகள்
9.உணவும், உறக்கமும் முறை/நேரம் தவறும் 
10.உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை
11.ஓய்வில்லாத பணி!
12.ஆஸ்துமாவை உருவாக்கும் மணல் காற்றும், புகையும்!
13.கடுமையான வெப்பம்
14.பெனடாலும் தைலங்களும் உற்றத்தோழர்கள் ஆகியனவாகும்.
சுருக்கமாக கூறினால் வளைகுடாவசிகளின் மனதில் சிறகு முளைத்த கனவுகள் ஒவ்வொன்றாக கருகிப் போகின்றன.

பொதுவாகவே வளைகுடாவுக்கு வேலை தேடி வருவோருக்கு பணமே முக்கிய நோக்கம் ஆகும்.அதனால்தான் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் என்ற தத்துவம் எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெத்து வேட்டுதான். பணிகளுக்கு இடையே ஒய்வு என்பது செயல் திட்டத்திலேயே இல்லை. பெரும்பாலோர் 12-13 மணிநேரங்கள் உழைக்கின்றனர். இதன் பலனாக கிடைப்பது முதுகு வலி.
முதுகு வலிக்கு முக்கிய காரணி மன அழுத்தம் ஆகும். வளைகுடா வாசிகளைப் பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு எவ்வித பஞ்சமுமில்லை. இத்துடன் உடற்பயிற்சியும் இல்லை என்றால் முதுகுவலி ஏற்படுவது இயல்பே.நமது சிந்தனைப் போக்கை மாற்றி நமது ஆரோக்கியத்தைக் குறித்து சற்று சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்ந்தால் முதுகு வலி இல்லாத வாழ்க்கையை சொந்தமாக்கலாம்.

கடுமையான வெப்பம்
வளைகுடா வாசிகளால் தாங்க முடியாதது அங்கு கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் நிலவும் கடுங் குளிருமாகும்.
கோடை காலத்தில் 50 டிகிரி வரை சூடு நிலவும். குளிர் காலத்திலோ மைனஸ் டிகிரியை அடையும். இவை இரண்டுமே அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஏர்கண்டிசன் இல்லாத வாழ்க்கையை இங்கு சிந்திக்க கூட முடியாது. ஆனால் வெளியே வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் வெப்பத்தையும், குளிரையும் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், நோயாளிகளும், ஆரோக்கியம் இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke காரணமாக நினைவு இழந்து விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் ஏற்படும் இழப்புகள் தங்களை பாதிக்காமலிருக்க ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிச் செய்துள்ளனர். இவையெல்லாம் உயிரை காப்பாற்றலாம், ஆனால் உடல்நலனை பாதுகாப்பதற்கு போதுமானது அல்ல.

தாயகத்தில் கிடைப்பதைவிட பல மடங்கு வருமானத்தை எதிர்பார்த்து இந்தியர்கள் வளைகுடாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால், திடீரென மாறும் வாழ்க்கைச் சூழல் அவர்களை விரைவில் வாழ்க்கை முறை மாறுவதால் ஏற்படும் நோய்களில் பிடியில் சிக்கவைக்கிறது.
  
இக்கட்டுரையின் துவக்கத்தில்/தலைப்பில் கூறியபடி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை புரிந்துகொண்டால் நாம் இந்த துயரங்களை தவிர்க்கலாம். போதும் வாலிபமே கரைந்துக்கொண்டிருக்கும் வேளையில் நாம் ஏன் இங்கே இவர்களின் பிடியில் நம் திறமையையும், உடல் ஆரோகியத்தையும் இழப்பது போதும் நம் முன்னோர்களின் செய்த இந்த செயல் நமக்கெதுக்கு நம் இந்தியாவில் நிரைய காலியிடங்கள் நிரம்பி வழிய வளைகுடா மற்றும் இதர அயல்நாடு தேவைதான இளைங்ஞர்களே சிந்திப்பீர் 

என்ன கொடுமை?உறவுகளின் தூரம் அதிகமாகப் போய் விட்டதால் தொலைபேசியிலேயே பாதி வாழ்க்கையாகவும் பாதி சம்பளமுமாகவும் போய் கொண்டு இருக்கிறதுஎங்களுக்கு. சாபமா வரமா தெரியாது. கேள்விகளும் ஆச்சரியங்களும் என்றும் முற்று பெறாது தொடரும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும் என் அன்புச் சகோதரிகளே...!! தாய்மார்களே....! இதைப் படித்து விட்டு நீங்கள் கண்ணீர் விடுவதை விட...

உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டால்... அந்தச் சகோதரர்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்!
நம் முஸ்லிம் சமுதாய நெஞ்சங்களே நம் இந்தியாவில் காலி பணியுடங்கள் நிறைய இருக்கின்றன அதில் சில
சார்-பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப் 2 பிரிவின் கீழுள்ள 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் த.உதயசந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர், வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. அந்தப் பிரிவில் 3 ஆயிரத்து 631 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
  • அதன்படி, தேர்வாணையத்தின் இணையதளம் வழியாக (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க கடைசித் தேதி ஜூலை 13 ஆகும்.
  • வங்கி மற்றும் அஞ்சலகங்களில் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூலை 17.
  • தேர்வு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
  • குரூப் 2 தேர்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் பெற்று இருப்பது அவசியம்.
  • விண்ணப்பக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100.
  • பொது அறிவுடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
  • இந்தத் தேர்வினை நடத்துவதற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 114 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நிரந்தரப் பதிவு:
  • தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நிரந்தரப் பதிவு மற்றும் குரூப் 4 தேர்வுக்கு வழங்கப்பட்ட நிரந்தரப் பதிவெண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • பதிவெண் மற்றும் கடவுச்சொல் இல்லாதவர்கள் நேரடியாக தேவைப்படும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். அவர்களின் விவரங்கள் நிரந்தரப் பதிவுக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:

தேர்வுக்கு இணையதளம் வழியே வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கும் பட்சத்தில் இணையதளத்தில் எளிதாகப் பதிவு செய்வதோடு, தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் தவிர்க்கலாம் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாவிற்காக காத்திருந்தது போதும் விழித்தெழு இஸ்லாமிய இளைய சமூகமே !

 அதிரை தென்றல் (Irfan Cmp) 
Share: